சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் சேதம் ரூ.300 கோடி! - கட்டிடம் இன்று இடிப்பு!
சேதம் அடைந்த அந்த கட்டிடம் இன்று இடிக்கப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர்.
சென்னை தியாக ராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளை கொண்ட சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை உள்பட 12 நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ‘
எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர் காக்கும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.முதலில் கடையின் மேல் தளத்தில் உள்ள கேண்டீனில் தங்கி இருந்த 14 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடினார்கள். ஆனாலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.
இதனால் தரைத்தளத்துக்கு கூட வீரர்களால் செல்ல முடியவில்லை. தொடர்ந்து கட்டிடம் தீயின் பிடியில் இருந்ததால், அதன் உறுதித்தன்மை கேள்விக்குறி ஆனது. இதனால் இரவு முழுவதும் கட்டிடத்தை குளிர்விக்கும் வகையில், கட்டிடம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் இரவு 12 மணிக்கு மேல் கட்டிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் பின்வாங்கிச் சென்றனர். அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. கண்ணாடிகளும் பெயர்ந்து விழுந்தன.
நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கூரைகள் சரிந்தன. அந்த சமயத்தில் கட்டிடத்தில் விரிசல் அதிகமானது. அடுத்த 2 நிமிடங்களில் கட்டிடத்தின் உள்பகுதி அப்படியே சீட்டுக்கட்டு போல பயங்கர சத்தத்துடன் சரிய தொடங்கியது. மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தூசியுடன் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
கட்டிடம் இடிந்து விழுந்ததும் தீயின் வேகம் குறையும் என்று நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கட்டிடத்தின் முன்பகுதி காலை 7 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் முன்பகுதியில் உள்ள கம்பி தடுப்புகள், சிலாப்புகள் பெயர்ந்து விழுந்தன. கண்ணாடிகள் சாலையில் விழுந்து உடைந்து நொறுங்கின. இதனால் கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி ஜவுளிக்கடைக்கு மிக அருகில் உள்ள ‘விஜி பிளாட்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை, வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 20 வீடுகளை கொண்ட அந்த குடியிருப்பில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து மற்றவர்களும் அங்கிருந்து வெளியேறி தங்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு பற்றிய தீ நேற்று மாலை 5.30 மணி அளவில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 37 மணி நேரம் போராடி தீயை அணைத்து உள்ளனர். என்றாலும் கட்டிடத்தின் உள்ளே சில இடங்களில் புகைந்து கொண்டே இருந்தது.
இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலை கடைக்கு பின்புறம் உள்ள வாகன நிறுத்தத்தில், கட்டிட இடிபாடுகளை கொண்டு 20 அடி உயரத்துக்கு தற்காலிக மேடு அமைக்கும் பணி நடந்தது. கட்டிடத்தின் மீதமுள்ள பகுதிகளையும் இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments