Header Ads

புதிய கட்சியுடன் சீனா பறக்கும் மஹிந்த


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு புதன்கிழமை சீனாவிற்கு செல்கின்றது. டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் குழு அங்கு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்கள் எதிர்வரும் புதன் கிழமை சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். சுமார் ஒரு வாரகாலம் வரை சீனாவில் தங்கியிருக்கும் குழுவினர் அந்நாட்டு அரச மட்ட தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

அதேபோன்ற சீனாவில் வாழும் இலங்கையர்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். புதிய கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பவற்றை தெளிவுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் கன்னி ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்ற நிலையில், புதிய கட்சியின் கன்னி விஜயமாக சீனா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர் கொண்டு புதிய கட்சியினை வலுப்படுத்தும் கூட்டு எதிர் கட்சியினர் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

நாளை இடம்பெற உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் பிறந்த நாளன்று புதிய கட்சி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க உள்ளார். இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற உள்ளன. நாளை மறுநாள் சனிக்கிழமை அநுராதப்புரத்தில் பிரதான நிகழ்வு இடம்பெறுகின்றது.

No comments

Powered by Blogger.