Header Ads

உறுப்பினர்களுக்கு வாகனங்கள்: நிதி மோசடி இடம்பெறுவதாக அனுரகுமார சந்தேகம்


திட்டக்கண்காணிப்பு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 58 பேருக்கு, குத்தகை அடிப்படையில் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட ஆவணமொன்று என்னிடமுள்ளது. 58 உறுப்பினர்களுக்கு வாடகை வாகனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு, அதற்கான மாதாந்த வாடகை 5,90,000 ஐயும் வரி மற்றும் என்.டி.டி ஆகியவற்றை சேர்க்கும் பட்சத்தில் 7 இலட்சம் செலவாகின்றது. 7 இலட்சம் மாதாந்த வாடகை கொண்ட வாகனங்களை வழங்குவதற்கான பத்திரத்தை நிதி அமைச்சு அமைச்சரவையிடம் முன்வைத்தது. 

அந்த பத்திரம் பொருளாதாரக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் மாதம் முதலாம் திகதி வெட் வரி அமுல்படுத்தப்பட்டது. இந்த வாகனங்களை வாடகைக்குப் பெற வேண்டிய நிறுவனத்தைத் தீர்மானித்த பொருளாதார குழு, ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதனை பாராளுமன்ற விவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. 60 மாதங்களுக்கு வாடகைக்கு வாகனங்களைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு வாகனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் சந்தை பெறுமதியை விட அதிகமாகும். 

ஒரு வாகனத்திற்கு 420 இலட்சம் ரூபா தேவை என்பதும் 58 வாகனங்களுக்கு 2,436 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதும் இதன் ஊடாக தெளிவாகின்றது. என தெரிவித்தார்.

மேலும், இவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டாலும் வாகன உரிமை அரசாங்கத்திற்குக் கிடைக்காது என கூறப்படுவதாக சுட்டிக்காட்டிய அனுரகுமார, இந்த செயற்பாட்டின் ஊடாக பாரிய நிதி மோசடி இடம்பெறுகின்றதா என்ற நியாயமான சந்தேகமொன்று தமக்கு எழுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.