Header Ads

ஹர்தலுக்கு தமிழ் முஸ்லீம் தலைவர்கள் பொது மக்களுக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளன.

கூட்டமைப்பு

"தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெறும் இந்தக் ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.

இவர்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்த் தரப்பினர் மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, வடக்கு, கிழக்கில்

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கும் மூவின சமூகத்தினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதை இன்னமும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை, கோரிக்கைகளை மதிக்காமல் இந்த அரசு செயற்படுகின்றது. இதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நாம் அயராது உழைப்போம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நாளைமறுதினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு ஆதரவு வழங்குகின்றது என அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

"வடக்கு, கிழக்கு முழுவதும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது முழு ஆதரவைத் தெரிவிக்கின்றது. இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

"வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும்'' என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தலைமையாகக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது:-

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கு எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும். அதேவேளை, இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்ததுத் தரப்பினரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை தீர்க்கப்பட வேண்டும். இதில் அரசு கரிசனை செலுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டாலும், ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்'' - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.