Header Ads

இனம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் இதுதான் முதலமைச்சர்


பாரிய இழப்புக்களை சந்தித்தாலும், தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு கல்வியே அடிப்படைக்காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண மாணவர்களுக்கான சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு யாழ்.இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்று நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவோ விளம்பரப்படுத்துவதற்காகவோ பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. வேலைச் சுமைகளை வைத்துக்கொண்டும், இவ்வாறான பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றோமாயின் எமது மக்களின் வருங்காலத்தினை கருத்திற்கொண்டே தவிர எமது குரல்களை கேட்பதில் எமக்கு வேறொன்றுமில்லை.

குழந்தைகள் சின்ன திறமை மிக்கவர்கள், அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். சிறுவர்கள் விளையாட்டுடன் கூடிய கல்வி முறைக்கு மாற்றப்பட வேண்டும். இயற்கையுடன் கூடிய அறிவினை உட்புகுத்த வேண்டும். கல்வி மாணவர்களுக்கு சுமையாக அமையக் கூடாது. பரீட்சையில் தோல்வி கண்ட மாணவ மாணவிகள் தமது உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளார்கள்.

மாணவ மாணவிகள் மீது சூழல் ஏற்படுத்தும் நெருக்குதல்களே தற்கொலைக்குக் காரணம். மாணவர் மனங்களில் போட்டி பொறாமை குடிகொண்டுள்ளது. பரீட்சையில் தோற்றுகின்ற மாணவ மாணவிகளின் முடிவுகள் வியப்பினைத் தருகின்றது.

இலட்சியங்கள் என்ன என கேட்டு மாணவர்களின் மனங்களில் போட்டி பொறாமை உணர்வுகளையும், தான் என்ற உணர்வுகளையும் பெற்றோர்கள் ஏற்படுத்துகின்றார்கள்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்த நாட்டில் உள்ள பொருளியலாளர்களை வைத்தே கணிக்கின்றார்கள்.

இன்னல்கள், இடம்பெயர்வுகள் சொத்து இழப்புக்கள் உட்பட பாரிய இழப்புக்களுக்கு மத்தியில் தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கின்றதென்றால், எம்மிடையே அடிப்படை உரிமையாக இருக்கும் கல்வியே மூல காரணம்.

மாணவர்களே வெறுமனவே, நேரங்களை வீணாக கழிக்காமல் கல்வியிலும், விளையாட்டிலும் ஈடுபடுங்கள். அவ்வாறு ஈடுபட்டால் மாத்திரமே, கல்விச் சமூகத்தினையும், ஒழுக்க சமூகத்தினையும் உருவாக்க முடியும்.

ஊங்களில் யாராவது, தவறான பழக்க வழக்கங்களிலும், முரட்டுக் குணங்களிலும் ஈடுபடுவார்களாயின் அவர்களை திருத்துவது மாணவர்களின் பங்கு என கருதி அவர்களை திருத்த முன்வாருங்கள் என்றார்.

No comments

Powered by Blogger.