Header Ads

வெளிநாடுகளில் வசிப்பவர்களா நீங்கள்? உங்கள் வாழ்வில் எதையெல்லாம் இழந்திருக்கின்றீர்கள் என்று சிந்தித்ததுண்டா?


இலங்கைவாழ் மக்கள் பல காரணங்களுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு செல்வதால் அவர்கள் வாழ்வில் எவற்றை எல்லாம் இழக்கின்றார்கள் என்று யாரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா?

வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு யுத்தம், கல்வி, திருமணம், உத்தியோகம் மற்றும் பொருளாதாரத்தை தேடிக்கொள்ளவது போன்ற பல விடயங்களை முன்வைக்கலாம்.

இதில் சிலர் விருப்பத்துடன் செல்கின்றனர், பலர் ஒருமனதுடன் செல்கின்றனர். இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. மன விருப்பத்துடன் செல்பவர்கள் கூட காலப்போக்கில் சொந்த மண்ணை நினைத்தும், சொந்தங்களை நினைத்தும் ஏங்குவது உண்டு.

ஒவ்வொரு நபரும் வெளிநாடுகளுக்கு சென்ற சந்தர்ப்பங்களையும், அவர்கள் இழந்த விடயங்களையும் சற்று மீட்டுப்பார்ப்போம்.

உள்நாட்டு யுத்தம்...

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தமது உயிரை காப்பாற்றுவதற்கும், தங்கள் சந்ததியினரின் உயிரை காப்பாற்றுவதற்கும் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் தற்போது சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் இழந்தவை ஏராளம்.

சொந்தங்கள், வாழ்ந்த இடம், பூர்வீக சொத்துக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அனைத்தையும் இவர்கள் தவறவிட்டுள்ளார்கள்.

கல்வி...

கல்விக்காக சிறுவயதிலேயே பிரிந்து செல்லும் இளம் சமூகத்தினர் பெற்றோரின் அரவணைப்பை இழக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் நல்லநிலையில் இருக்க நினைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதற்காக இவர்கள் இழப்பது தாய், தந்தை, சகோதரம், உறவினர்களின் பாசம்.

ஆனால் ஒன்று கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் சிலவேளை நாடு திரும்பி விடுவார்கள்.

குறிப்பிட்ட சிலர் வெளிநாடுகளிலேயே வேலைகளைத் தேடி சொந்த நாட்டிற்கு விருந்தினர்களைப் போல் வந்து செல்வார்கள் என்றால் மிகையாகாது.

திருமணம்...

தற்போதைய காலக்கட்டத்தில் இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களை மணந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இதில் சில ஆண்களும் வெளிநாடுகளில் இருக்கும் பெண்களை மணக்கும் சந்தர்ப்பத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

காரணம் அவர்களை மணந்தால் அந்த நாடுகளுக்குசென்று வாழலாம் என்ற ஒரு ஆசை என்றே கூறவேண்டும்.

பிள்ளைகள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சில பெற்றோரும், தாங்கள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக பிள்ளைகளும் இந்த வெளிநாட்டு வாழ்வை விரும்புகின்றனர்.

ஆனால்.... இவர்கள் மணமுடித்து சென்றபோது கிடைக்கும் சந்தோசங்களும், துக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாகவே இருக்கும்.

குடும்ப உறவுகளைக்காண தவம் கிடக்க வேண்டும். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறிச்சென்றாலும், முகம் பார்த்து கதைக்கும் அளவிற்கு வந்தாலும், நேரில் பார்த்து கதைப்பதைப் போல் இருக்காது.

பெற்ற தாயின் மடியில் தலைவைத்து உறங்கும் சுகத்தை தராது. பிள்ளைகளுக்கு வாரிசுகள் உருவாகும் போது கட்டி அணைக்கும் சந்தோசத்தினை இவர்கள் இழக்கின்றார்கள்.

எல்லா சந்தோசங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து விட்டு இவற்றை விட்டுப் பிரிந்து செல்வதென்பது ஆரம்பத்தில் சுகமாக இருந்தாலும் காலம் போக போக ஒரு ஏக்கம் தோன்றத்தான் செய்கின்றது.

உத்தியோகம்...

நல்ல ஒரு உத்தியோகத்திற்காக செல்பவர்களும் ஒரு வகையில் அங்கேயே வாழ்ந்து வருபவர்கள் என்றுதான் கூற வேண்டும்.

இவர்களுக்கு விடுமுறை கிடைத்தால்தான் வரலாம், அதிலும் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்!

பொருளாதாரம்...

பொருளாதார முன்னேற்றத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்று உழைப்பவர்கள் அனைவரையும் விட துன்பத்தில் இருப்பார்கள் என்பது அனுபவப்பட்டவர்களிடம் கேட்டால் உங்களுக்கே புரிந்து விடும்.

ஆம் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வேண்டம் என்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று இளைஞர் யுவதிகள் படும் துயரங்கள் எண்ணிலடங்காதவை,

தங்குமிடம், சம்பளம், பாதுகாப்பு போன்றவை பெரும் அச்சநிலையில் காணப்படுகின்றது.

பெற்றோரையும், உறவுகளையும், மனைவி பிள்ளைகளையும் பிரிந்து பெரும் கஷ்டப்பட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாடு செல்கின்றார்கள்.

இலங்கையை எடுத்துக்கொண்டால் மலையகத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக குடும்பத் தலைவிகள் பிள்ளைகளை பிரிந்து செல்கின்றனர்.

இதனால் குடும்பத்திலுள்ள சிறு சிறு சந்தோஷங்களை இழக்கின்றார்கள். ஆனால் இவர்கள் திரும்பி வரும் செய்தியைக் கேட்டால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தூர ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.