Header Ads

இளையராஜாவுடன் என்ன பிரச்சினை? மனம் திறந்தார் எஸ்.பி

இசைத்துறையின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

இளையராஜாவினால் இசையமைக்கப்பட்ட பாடல்களை முன் அனுமதியின்றி பாலசுப்பிரமணியம், வெளிநாட்டு மேடைகளில் பாடக் கூடாது என சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டது.

மிகவும் நெருக்கமான நண்பர்களாக பார்க்கப்பட்ட வந்த இளையராஜா - பாலசுப்பிரமணியம் கூட்டணிக்குள் இவ்வாறான முறுகல் பலரை ஆச்சரியபடச் செய்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் இசைக்கச்சேரியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்.

காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. எனினும் இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன்.

காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம் தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று தனக்கு தெரியாது.

எனினும் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் பேசவிடாமல் தடுக்கிறது. எனினும் எங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்.

இளையராஜாவின் இசையில் மீண்டும் பாடுவேனா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். அவருக்கும் எனக்கும் எந்தவொரு அபிப்பிராய வேறுபாடும் கிடையாது. நானும் அவரும் நண்பர்கள் தான். காலம் எப்படி நிர்ணயிக்கிறதோ அப்படி நிர்ணயிக்கட்டும், நடக்கும். நான் எப்போதுமே தலை நிமிர்ந்து நடந்து கொள்ள மாட்டேன். எந்தப் பாடலையும் என்னுடைய சொந்தம் என்று நினைக்க மாட்டேன்.

ஒவ்வொரு பாடலுக்குச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இயக்குநர் பாடலின் பின்புலத்தை விவரிப்பார், இசையமைப்பாளர் இசையைக் கொடுப்பார், கவிஞர்கள் அழகான வரிகள் எழுதுவார்கள், நாங்கள் பாடுவோம், இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் அழகாக வாசிப்பார்கள், அதை அழகாக ஒலிப்பதிவு செய்வார்கள், இயக்குநர்கள் அழகாகக் காட்சிப்படுத்த வேண்டும், நடிகர்கள் அழகாக நடிக்க வேண்டும் என ஒரு பாடலுக்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கிறது. எனக்கு நல்ல பாடல்கள் கொடுத்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டியிருக்கிறேன்.

ஆகஸ்ட் மாதத்திலே டொரண்டோவில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்தி வருகிறோம். அமெரிக்காவில் நடக்கும் போது மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது.

அனைவருமே என்னிடம் நீங்கள் தொலைபேசியில் பேசிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரலாமே என்று கேட்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னத் தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதற்காக இளையராஜாவைக் குறைத்துப் பேசவே இல்லை. 2015ல் தான் காப்புரிமை சட்டத்தை எழுதியுள்ளார். அவரோடு சேர்ந்தும், இல்லாமலும் நிறைய நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன். இதைப் பற்றி அவர் என்னிடம் சொன்னதில்லை.

எனக்குத் தெரிந்திருந்தால் இளையராஜாவிடம் கேட்பதில், எந்தவொரு வேறுபாடும் கிடையாது. சட்ட ரீதியாக நோட்டீஸ் வந்த பிறகு நண்பர் தானே ஏன் இப்படி நடந்தது என்று ஒரு சின்ன வலி ஏற்பட்டுள்ளது. காப்புரிமை சட்டம் இருக்கும் போது, அதைக் கேட்பதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அவருடைய அலுவலகத்திலிருந்து கூட எனக்கு யாரும் போன் செய்யவில்லை.

இப்பிரச்சினை எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது. ஆனால், இளையராஜா மீது நான் வைத்திருக்கும் மரியாதை குறையாது. இந்தியாவில் இருக்கும் அனைத்து இசையமைப்பாளர்களோடும் பணியாற்றியுள்ளேன். ஆனால், இளையராஜா ஒரு ஜீனியஸ். காலம் மட்டுமே தெளிவான நிர்ணயத்தைக் கொடுக்கும் என பாடகர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.