Header Ads

வித்தியா கொலை சந்தேகநபர்களுக்கு நேர்ந்த அவலம்


புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எட்டு மணி நேரமாக உணவோ, நீரோ கொடுக்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8வது சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் நீதிபதியிடம் மேலும் தெரிவிக்கையில், தாம் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டு உள்ளோம். வழக்கு விசாரணை திகதிகளின் போது எம்மை அதிகாலை 2.30 மணியளவில் எழுப்பி அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் அழைத்து வருகின்றனர்.

இங்கு எமது வழக்கு விசாரணைகள் முடிவடைந்து நாம் மீண்டும் வவுனியா சிறைச்சாலை செல்லும் வரையில் எமக்கு உணவோ குடிநீரோ தரப்படுவதில்லை.

இங்கு வந்து செல்லும் போது எமது உறவினர்களை சந்திப்பதற்கோ அல்லது உறவினர்கள் தரும் உணவுகளை வாங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளே எம்மை அழைத்து வந்தார்கள். அவர்கள் இவ்வாறு மோசமாக நடந்து கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த 2 மாத காலமாக எம்மை அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளே அழைத்து வருகின்றார்கள். அவர்கள் வழக்கு விசாரணை திகதிகளின் போது அதிகாலை 2.30 மணிக்கு எம்மை எழுப்பி அவரச அவசரமாக அழைத்து வருவார்கள்.

அத்துடன் தம்மை பயங்கரவாதிகளை நோக்குவது போன்றும் அவர்களை நடத்துவது போன்றும் தம்மை நடாத்துகின்றார்கள் எனவும் அவர் நீதிபதியிம் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து நீதிவான், நீங்கள் யாரும் குற்றவாளிகளும் இல்லை பயங்கரவாதிகளும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீங்கள் நிரபராதிகள் போன்றே கவனத்தில் எடுக்கப்படுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாமை குறித்து விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.