Header Ads

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை - லண்டன் டாக்டர் மீண்டும் வருகை

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மீண்டும் லண்டனில் இருந்து டாக்டர் இன்று வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து இன்று 21 நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவ குழுவினர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையில் லண் டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே, சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து விட்டு நாடு திரும்பினார். தீவிர சிகிச்சை பிரிவு நிபுணரான அவர் பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை சீராக வைக்க உதவி செய்து வருகிறது.

இதையடுத்து கடந்த 5ந் தேதி டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னை வந்தனர். அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே பரிந்துரை செய்த சிகிச்சையுடன் இணைந்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் இன்று இரவு லண்டனில் இருந்து சென்னை வருகிறார். இந்த முறை அவர் திரும்பி செல்லும் தேதி முடிவு செய்யப்படாததால் அவர் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை சென்னையில் தங்கி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கில்நானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் அஞ்சன் டிரிக்கா (மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர்), டாக்டர் நிதீஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோரும் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் மூவரும் 3 நாட்கள் தங்கி இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து இருக்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகிறார்கள்.

மேலும், தமிழகம் முழுவதும் முதலமைச்சர் நலம் பெற வேண்டி அ.தி.மு.க.வினரும், பொது மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

No comments

Powered by Blogger.