Header Ads

விக்னேஸ்வரனின் லண்டன் விஜயமும் - காத்திருக்கும் சர்ச்சைகளும்


சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார்.

எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர்.

"பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை".

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா..? என பேரணியின் போது முதலமைச்சர் தெரிவித்திருந்தார்

இதனை ஒரு இனவாதமாக சித்தரித்து மன்னிப்பு கோர வேண்டும், பதவி விலகவேண்டும், கைது செய்ய வேண்டும் என தென்னிலங்கையிலிருந்து விக்னேஸ்வரனுக்கு எதிராக வார்த்தைகளால் வாள் வீசப்பட்டன.

அந்த மாபெரும் பேரணி இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அதேவேளை, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இன்னும் அந்த சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது வடமாகாண முதலமைச்சர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது இலங்கை அரசியலில் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் ஒன்றாக இருக்கும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகரசபைக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றில் வடமாகாண முதலமைச்சர் எதிர்வரும் 18ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் லண்டன் விஜயமே தற்போது பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல், அதன் அனுமதி பெறாமல் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டு தற்போது மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழேயே இயங்கி வருகிறது.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் யாழ்ப்பாண மாநகரசபையின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளனர்.

வடமாகாணசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை, மாறாக யாழ். மாநகரசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் தான் செய்யப்பட உள்ளது.

எனவே வடமாகாணசபைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், முதலமைச்சர் என்ற அந்தஸ்துடனேயே அவர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார். எனவே அவர் இதனை வடமாகாண சபைக்கு அறிவித்திருக்க வேண்டும்.

எனினும் முதலமைச்சர் இது வரையில் அவ்வாறான அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த உடன்படிக்கை தொடர்பில் லண்டன் கிங்ஸ்டன் நகரசபையில் விபரம் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த உடன்படிக்கை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அனைத்தையும் இரகசியமாகவே வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சரின் லண்டன் விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் அவர்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க எழுக தமிழ் பேரணியின் பின்னர் வடமாகாண முதலமைச்சருக்கு புலம் பெயர் அமைப்புகளினதும், புலம் பெயர் மக்களினதும் ஆதரவு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வாதிகளினால் பெரிதும் பேசப்பட்டமை யாவரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறான நிலையில், முதலமைச்சரின் லண்டன் விஜயத்தின் போது அங்கிருக்கும் புலம் பெயர் அமைப்புகளை சந்திக்க கூடும் எனவும், அதன் காரணமாகவே தனது பயணம் தொடர்பில் இரகசிய தன்மை பேணப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண முதலமைச்சரின் இந்த விஜயம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக இருந்தாலும் அதனை புலம் பெயர் அமைப்புகள் சாதகமாக பயன்படுத்திகொள்ளும் என தென்னிலங்கை அரசியல் வாதிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக தற்போது வடக்கு முதல்வர் இருப்பதன் காரணமாக அவரை சந்திப்பதற்கு புலம் பெயர் அமைப்புகள் முயற்சிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரனை நியமித்த போது கண்டணம் வெளியிட்ட புலம் பெயர் அமைப்புகள், தற்போது தமிழ் மக்களுக்காக விக்னேஸ்வரன் குரல் கொடுக்க தொடங்கிய நிலையில், புலம் பெயர் அமைப்புகள் மத்தியில் அவருக்கான ஆதரவு பெருகியுள்ளது.

அத்துடன், விடுதலைப்புலிகளின் தலைவரின் தலைமைத்துவ வெற்றிடத்தை விக்னேஸ்வரன் நிரப்புவார் என்ற நம்பிக்கை இன்று புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளும், சர்ச்சைகளுடனான வடக்கு முதலமைச்சரின் இந்த விஜயத்தின் போது புலம் பெயர் அமைப்புகளுடன் சந்திப்பு ஏதும் இடமபெறுமாயின் அது கொழுமப்பு அரசியலில் அணு குண்டு வெடிப்பதற்கு ஒப்பானதாகிவிடும்.

மேலும் வடக்கு முதல்வரின் லண்டன் விஜயம் அரசியலில் அநாதையாக்கப்பட்ட பலருக்கும் வாய்ப்பாக அமையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தன் இன மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு தலைவனை தென்னிலங்கை அரசியல் வாதிகள் இனவாதியாக சித்தரித்த நிலையில், வடக்கு முதல்வரின் இந்த விஜயத்தினை வைத்து பெரும் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

No comments

Powered by Blogger.