Header Ads

எஜமானின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த நாய்!


எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வீட்டில் வசிக்கும் செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

பிரஸ்தாப நாய் தினந்தோறும் அவருடனே அருகிலிருந்து சாப்பிடுவதும் உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று குறித்த வீட்டின் பின் வளவுக்குள் ராஜநாகம் ஒன்று பிரவேசித்துள்ளது.

நாகம் வந்திருப்பதனை அவதானித்த நாய், எஜமான் முன் குரைத்து அவரை விழிப்படையச் செய்துள்ளது.

நாயின் அடையாளப்படுத்தலுடன் வீட்டின் பின்பகுதிக்குள் சென்ற போது அங்கு மூலையில் ஏதோ வொன்று மறைந்துள்ளதை அவதானித்த நபர் அது என்னவென கண்டறிய தடியை அங்கு நீட்டியுள்ளார்.

இதன்போது வெகுண்டெழுந்த சுமார் எட்டு அடி நீளமான ராஜநாகம் அவரை கொத்த முயன்றுள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட நாய் ராஜநாகத்தை தன்வாயால் இறுக கெளவியபடி அவ்விடத்தை விட்டு விரைவாக சென்று எஜமானின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

நாய்க்கும் ராஜநாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நாகத்தின் விஷ­ப்பல் தாக்கி காலில் காயமடைந்த நாய் உடனடியாக சிகிச்சைக்காக மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.00 மணியளவில் நாய் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நாயுடனான மோதலில் பலவீனமடைந்த ராஜநாகமானது அயலவர்களின் உதவியுடன் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டு இரும்புக்கூட்டில் அடைக்கப்பட்டது.

இதேவேளை எஜமானின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு மரியாதை செய்வதற்காக நாயின் இறுதிச் சடங்கானது இன்றைய தினம் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிடிபட்ட ராஜநாகத்தையும் உயிரிழந்த அல்சேசன் நாயையும் அப்பகுதி மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.